Monday, January 12, 2009

A R Rahman wins Golden Globe


நியூயார்க்: ஜனவரி 12, 2009
ந்திய சினிமாத்துறையின் புகழை உலகுக்கு உணர்த்தும் விதமாக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கொல்டன் குளோப் விருதைப் பெற்றார்.
சர்வதேச அளவில் சினிமாத் துறையினருக்கு வழங்கப்படும் விருதுகளில், ஆஸ்காருக்கு அடுத்தாக மிக உயரிய விருதாகக் கருதப்படுவதே கோல்டன் குளோப் விருது!
'ஸ்லம்டாக் மில்லினியர்' ('Slumdog Millionaire) என்ற படத்துக்காக இவ்விருதுக்கான தெரிவிப் பட்டியலில் இடம்பிடித்திருந்த ரஹ்மான், கோல்டன் குளோப் விருதைத் தட்டிச் சென்றார்.
நியூயார்க்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது அறிவிக்கப்பட்டு, ரஹ்மானுக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டது.
இதன் மூலம் 'கோல்டன் குளோப்' விருதைப் பெற்ற முதல் இந்திய சினிமா இசைக் கலைஞர் என்ற மிக உயரிய சிறப்பைப் பெற்றார், ஏ.ஆர்.ரஹ்மான்!
ஏ.ஆர்.ரஹ்மானை இந்திய சினிமாவுக்கு வழங்கிய தமிழகம், இப்போது உலக அளவில் ரஹ்மான் புகழ் சேர்த்துள்ளதற்கு பெருமிதம் கொள்கிறது!
இந்த உயரிய விருதைப் பெற்ற ரஹ்மானுக்கு இந்திய முன்னணி கலைஞர்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
'ஸ்லம்டாக் மில்லினியர்' பற்றி விகடனின் வெளியான கட்டுரை...
கடந்த நவம்பரில் ரிலீஸான இந்தப் படம் பெற்ற விருதுகளைப் பட்டியலிடவே சிலபல பாராக்கள் தேவைப்படும். பெற்ற விருதுகளுள் முக்கியமானது அமெரிக்காவின் தேசிய திரைப்படங்கள் திறனாய்வு விருது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர் என கண்டம் தாண்டி கண்டம், விருதுகளையும் வசூலையும் குவித்துக்கொண்டு கம்பீரமாக ஆஸ்கர் அரங்க என்ட்ரிக்குக் காத்திருக்கிறது 'ஸ்லம்டாக் மில்லினியர்'!
விகாஸ் ஸ்வரூப்பின் நாவலை உச்சகட்ட உதறல் திரைக்கதையுடன் இயக்கியிருக்கிறார் பிரிட்டிஷ் இயக்குநர் டேனி பாய்ல். இயக்கம், கேமரா, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் சங்கதிகளை பிரிட்டிஷ் மக்கள் கவனித்துக்கொள்ள... நடிப்பு மற்றும் இசை மட்டும் இந்தியர்கள் வசம். என்னதான் கதை?
மும்பை போலீஸார் ஜமால் மாலிக்கை சித்ரவதை செய்து, 'உண்மையைச் சொல்லு... உனக்கு எப்படி எல்லாம் தெரியும்?' என்று விசாரித்துக்கொண்டு இருக்கும் இடத்தில் துவங்குகிறது படம். ஜமால் மீதுள்ள குற்றச்சாட்டு? 'கோன் பனேகா க்ரோர்பதி?' நிகழ்ச்சியின் ஒவ்வொரு கேள்விக்கும் மிகச் சரியான பதில் சொல்லி இறுதிச் சுற்றை எட்டிப் பிடித்ததுதான்! மும்பையின் மிக மோசமான சேரிகளில் வளர்ந்திருந்த ஜமால் மாலிக் எப்படி அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில் அளிக்க முடியும் என்பது போலீஸாரின் சந்தேகம். பதில் சொல்கிறது ஜமாலின் ஃப்ளாஷ்பேக். சின்ன வயதிலேயே மதக் கலவரத்தில் தன் தாயை இழக்கும் ஜமால், சேரியில் அநாதையாக சுற்றித் திரிகிறான். அப்போது அவனையும் சலீமையும் பிடித்துச் செல்கிறது பிள்ளை பிடிக்கும் கும்பல் ஒன்று. சலீம் அந்தக் கும்பலின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர்களுடன் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்குகிறான். ஜமாலும் இன்னொரு சிறுமியான லத்திகாவும் பிச்சை எடுத்து வருமானத்தை தாதா கும்பலிடம் கொடுக்கிறார்கள். அப்போதே லத்திகா மீது ஜமாலுக்கு கன்றுக்குட்டிக் காதல். மூவரும் அந்தக் கும்பலிடம் இருந்து தப்பிக்க முற்பட, லத்திகா மட்டும் மீண்டும் அவர்களிடமே சிக்கிக்கொள்கிறாள். ஜமாலும் சலீமும் தப்பித்து தாஜ்மகால் அருகே டூர் கைட், பிக்பாக்கெட் என்று பிழைப்பு நடத்துகிறார்கள்.
ஒரு கட்டத்துக்கு மேல் மனசு பொறுக்காமல் சலீமையும் இழுத்துக்கொண்டு லத்திகாவைத் தேடி மீண்டும் மும்பைக்கே வருகிறான் ஜமால். அங்கு சிவப்பு விளக்குப் பகுதியில் அவளைக் கண்டுபிடிக்கிறார்கள். லத்திகாவை இவர்கள் காப்பாற்றும் சமயம் அங்கே வரும் தாதா தலைவனைச் சுட்டுக் கொல்கிறான் சலீம். லத்திகா தனக்குத்தான் சொந்தம் என்று ஜமாலோடு மல்லுக் கட்டுகிறான். தன்னோடு வராவிட்டால் ஜமாலைக் கொன்றுவிடுவதாக சலீம் மிரட்டவும் வேறு வழியில்லாமல் அவனோடு செல்கிறாள் லத்திகா.
வருடங்கள் உருள்கின்றன. தட்டிமுட்டி ஒரு கால் சென்டரில் உதவியாளராக வேலை பார்க்கிறான் ஜமால். அதே சமயம் மாஃபியா க்ரூப்பில் தளபதி கணக்காக வளர்ச்சியடைகிறான் சலீம். தன் மீது அதே காதலுடன் லத்திகா இருப்பதும், ஆனால், சலீமைவிட்டு பிரிந்து வர முடியாமல் தவிப்பதையும் அறிந்துகொள்கிறான் ஜமால்.
என்ன செய்தாவது லத்திகாவின் கவனம் கவர விரும்பும் ஜமாலின் நினைவில் பளிச்சிடுவது அவளுக்குப் பிடித்த 'கோன் பனேகா க்ரோர்பதி?' நிகழ்ச்சி. அதில் கலந்துகொண்டால் லத்திகாவின் கவனம் கவர முடியும் என்று முட்டி மோதி போட்டியில் பங்கெடுத்துக்கொள்கிறான். அமிதாப் பச்சன் போல நிகழ்ச்சியை நடத்துவது அனில் கபூர். மடக்கி மடக்கி கேள்வி கேட்டாலும் எல்லாவற்றுக்கும் சரியான பதில் சொல்லி இறுதிச் சுற்றை எட்டுகிறான் ஜமால். ஒரே ஒரு கேள்விக்குப் பதில் சொன்னால் பிரமாண்ட பரிசுத் தொகை. 'அதெப்படி சேரியில் வளர்ந்த ஒரு 'முஸ்லிம்' சிறுவன் சரியான பதில் சொல்ல முடியும். இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது' என்று கிளப்பிவிடப்படும் விவகாரம் காரணமாக போலீஸ் ஜமாலைக் கைது செய்கிறது.
ஜமாலின் பின்னணி தெரிந்தவுடன், அவன் 'கள்ளாட்டை' எதுவும் ஆடவில்லை என்று உணர்ந்து அவனை விடுவிக்கிறார்கள் போலீஸார். மீண்டும் 'கோன் பனேகா' அரங்கத்தில் ஜமால். இதற்குள் மீடியா கவனம் பெற்று நாடே நிகழ்ச்சியைப் பார்க்க டி.வி. முன் அமர்ந்திருக்கிறது. இந்தப் பரபரப்புகளுக்கு இடையில் லத்திகாவின் காதலை உணர்ந்து அவளிடம் தன் காரையும் செல்போனையும் கொடுத்து ஜமாலைச் சந்திக்க அனுப்புகிறான் சலீம். அங்கே போட்டியில் ஜமாலிடம் அந்த இறுதிக் கேள்வி கேட்கப்படுகிறது. அவனுக்குப் பதில் தெரியவில்லை!
நண்பனிடம் தொலைபேசி மூலம் உதவி கேட்கும் ஆப்ஷனை உபயோகப்படுத்துகிறான் ஜமால். அவன் கொடுத்திருக்கும் எண் சலீமினுடையது. அந்த செல்போனை காரிலேயே மறந்து வைத்துவிட்டு ரோட்டோர டி.வி-யில் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள் லத்திகா. தன்னிடம்தான் போன் இருக் கிறது என்று உணர்ந்து கடைசி நொடியில் போன் பட்டன் அழுத்தி 'ஹலோ' என்கிறாள். லத்திகாவின் குரலைக் கேட்டதுமே பரிசு கிடைத்ததைக் காட்டிலும் அதிக உற்சாகமடைகிறான் ஜமால். அவளிடம் கேள்விக்குப் பதிலைக் கேட்க, அவளுக்கும் பதில் தெரியவில்லை.
ஜமால் சரியான பதில் சொன்னானா, லத்திகாவோடு இணைந்தானா என்பது க்ளைமாக்ஸ்! ரஹ்மானின் ஒவ்வொரு தாளத்துக்கும் தியேட்டர் அதிர்கிறதாம்


Courtesy: vikatan.com

No comments: