Tuesday, February 24, 2009
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள்!
லாஸ் ஏஞ்செல்ஸ், பிப்.23: 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், உலக அளவில் சினிமாத் துறையில் மிக உயரியதாக போற்றப்படும் ஆஸ்கர் விருதுகள் இரண்டினை வென்று, இந்தியாவையே ஆனந்தக் கடலில் ஆழ்த்தினார்.
ஹாலிவுட்டின் மிக உயரிய விருதான ஆஸ்கருக்கு, ஸ்லம்டாக் மில்லினியர் படத்துக்காக, இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் இரண்டு பிரிவுகளின் கீழ் மூன்று பரிந்துரைகளைப் பெற்றது.
சிறந்த ஒரிஜினில் ஸ்கோர் (இசை) மற்றும் இரண்டு பெஸ்ட் ஒரிஜினல் சாங் ('ஜெய் ஹோ' மற்றும் 'ஓ சாயா') பிரிவுகளில் ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், 81-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்செல்சில் உள்ள கோடக் அரங்கில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.00 மணியளவில் தொடங்கியது.
இதில், ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான (ஒரிஜினல் ஸ்கோர்) ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் விருதைப் பெற்றுக் கொண்டார்.
இவ்விருதை தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிப்பாதாக தனது ஏற்புரையில் கூறிய ஆஸ்கர் நாயகன் ரஹ்மான், 'எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே' என்று தமிழில் முழக்கமிட்டபோது, அரங்கமே சிலிர்த்தது!
அதைத் தொடர்ந்து, சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதையும் அவர் வென்றார். ஸ்லம்டாக் படத்தில் வரும் 'ஜெய் ஹோ' பாடலுக்காக இவ்விருது வழங்கப்பட்டது.
விருது வழங்கும் அரங்கத்தில் இருந்த ஸ்லம்டாக் மில்லியனர் படக்குழுவினர் மட்டுமின்றி, அரங்கதில் இருந்த அனைவரும் கரகோஷத்தை எழுப்பினர்.
அதேபோல், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு ஆஸ்கர் விருது வழங்கும் விழா குறித்த செய்திகளை இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சியில் கண்டு, ரஹ்மானுக்கு விருது என்று அறிவித்தவுடன் இன்ப அதிர்ச்சிக் கடலில் ஆழ்ந்து, மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு வருகின்றன.
ரஹ்மானின் 'ஆஸ்கர்' சிறப்புகள்!
இந்தியக் கலைஞர்கள் இருவர் மட்டுமே இதுவரை ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளனர். கடந்த 1982-ம் ஆண்டு 'காந்தி' படத்துக்காக சிறந்த காஸ்ட்யூம் டிசைனருக்கான ஆஸ்கர் விருதை பானு அதையா வென்றுள்ளார்.
கடந்த 1992-ல் இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட படைப்பாளியான சத்யஜித் ரே-வுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருதை' ஆஸ்கர் வழங்கியது.
இந்த நிலையில், ஆஸ்கர் விருதைப் பெற்ற முதல் இந்திய திரைப்பட இசைக் கலைஞர் என்ற பெருமையை, தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் பெறுகிறார். அதுவும், ஒன்றுக்கு இரண்டு விருதாக அள்ளியிருக்கிறார்!
மேலும், ஒரே படத்துக்காக, இரண்டு பிரிவுகளின் கீழ் மூன்று ஆஸ்கர் பரிந்துரைகளைப் பெற்ற இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையும் ரஹ்மானையேச் சேரும்.
அத்துடன், ஆஸ்கர் வென்ற முதல் தமிழர் என்ற மகத்தான பெருமையை ரஹ்மான் பெற்றுள்ளார்.
முன்னதாக, ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக, கோல்டன் குளோப், பாஃப்டா உள்ளிட்ட உயரிய விருதுகள் பலவற்றையும் வென்று, ரஹ்மான் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஸ்லம்டாக் மில்லியனர் கதை!
மும்பையை சேர்ந்த குடிசைவாழ் 18 வயது இளைஞன் ஒருவன், 'கோடீஸ்வராகப் போவது யார்?' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2 கோடி ரூபாய் பரிசை வெல்வதும், அதனூடே அற்புதமான காதல் கதை சொல்லப்படுவதுமே 'ஸ்லம்டாக் மில்லியனர்' ஆங்கிலப் படத்தின் கதை!
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மற்றொரு இந்தியக் கலைஞர்!
ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இயன் டாப் மற்றும் ரிச்சர்ட் பிரைக் ஆகியோருடன் இணைந்து சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார், ரெசுல் பூக்குட்டி! இதன் மூலம் இந்திய ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிட்டியுள்ளது!
கஜினி, பிளாக், சாவரியா, காந்தி மை ஃபாதர் உள்ளிட்ட பல படைப்புகளுக்கு சவுண்ட் டிசைனிங் கலையில் மகத்தான பங்களிப்பை அளித்தவர் இவர்.
கேரளாவைச் சேர்ந்த 36 வயது ரெசுல், புனே திரைப்பட கல்லூரியில் பயின்றவர். கடந்த 12 ஆண்டுகளாக சினிமாவில் இயங்கி வருபவர்.
இந்திய சவுண்ட் மிக்சிங் கலைஞர் ஒருவர் ஆஸ்கர் விருதைப் பெறுவது இதுவே முதன்முறை.
ஸ்லம்டாக் மில்லியனருக்கு 8 ஆஸ்கர் விருதுகள்.
உலக அளவில் வரலாறு காணாத வகையில் வரவேற்பைப் பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் படம், சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த இசை உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் 81-வது ஆஸ்கரில் 10 பரிந்துரைகளைப் பெற்றது.
இதில், மொத்தம் 8 ஆஸ்கர் விருது குவித்து 81-வது ஆஸ்கரில் முன்னிலை வகிக்கிறது, ஸ்லம்டாக் மில்லியனர்.
1. சிறந்த இசை (ஒரிஜினல் ஸ்கோர்) - ஏ.ஆர்.ரஹ்மான்.
2. சிறந்த பாடல் - "ஜெய் ஹோ..." இசை - ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் : குல்ஸார்
3. சிறந்த சவுண்ட் மிக்ஸிங் - ரிச்சர்ட் பிரைகே, ரேசுல் பூகுட்டி மற்றும் இயன் டாப்
4. சிறந்த இயக்குனர் - டானி போய்ல்
5. சிறந்த ஒளிப்பதிவு - ஆன்டனி டோட் மென்டில்
6. சிறந்த அடாப்டட் திரைக்கதை - சைமன் பியூஃபோய்
7. சிறந்த திரைப்பட எடிட்டிங் - கிறிஸ் டிக்கென்ஸ்
8. சிறந்த படம் - ஸ்லம்டாக் மில்லியனர் - ஏ காலண்டர் பிலிம்ஸ் புரோடக் ஷன் - தயாரிப்பாளர் - கிறிஸ்டியன் கோல்சன
Courtesy: vikatan.com
No comments:
Post a Comment