Saturday, February 28, 2009

A R Rahman Vikatan interview - after Oscars


இந்திய திரைப்படக் கலைஞர்கள் பலரும் ஆஸ்கர் விருதுகளைக் குவிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.
இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று பிற்பகல் சென்னையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியதாவது:
ஸ்லம்டாக் மில்லியனர் படம் மூலம் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைஅளிக்கிறது. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று தமிழில் பேசினேன். நான் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் சொல்லும் விஷயத்தையே தமிழில் அப்போதும் கூறினேன்.
ஹாலிவுட் படங்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய ஆஸ்கர் விருதை இத்தாலி, ஜெர்மெனி போன்ற நாடுகளைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் வென்றுள்ளனர்.
இந்த நிலையில், இந்திய இசைக்கலைஞர்களின் பிரதிநிதியாக நான் ஆஸ்கர் வென்றிருப்பது பெருமிதம் தருகிறது.
நான் மட்டுமின்றி, இனி வரும் காலங்களில் இந்திய, தமிழ் திரைப்பட கலைஞர்கள் பலரும் ஆஸ்கர் விருதுகளை குவிக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
ஸ்லம்டாக் மில்லியனர் படம் மிகச் சிறப்பாக அமைந்ததால் இசைக்கும் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. ஹாலிவுட் விரும்பும் வகையில் அப்படத்தில் இசை இருந்தன் காரணமாகவே இந்த அங்கீகாரம் கிடைத்தது.
வேறு இந்திய படங்களுக்கான இசைக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லையே என்று கருதுவது தவறு. ஆஸ்கர் என்பது ஹாலிவுட் படங்களுக்கு வழங்கப்படும் விருது. இந்திய படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
அதேநேரத்தில், வெளிநாட்டு படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருது, 'லகான்' படத்துக்கு கிடைக்காதது வருத்தமே.
ஒருவேளை ஸ்லம்டாக் படத்தை இந்திய இயக்குனர் இயக்கி, அது சிறப்பாக இருந்து, அந்தத் திரைப்படம்
ஹாலிவுட் வினியோகஸ்தர்களால் தயாரிக்கப்பட்டிருந்தாலும் ஆஸ்கர் கிடைக்கும்.
நான் இசையமைத்ததில், என்னைப் பொறுத்தவரையில் எல்லா பாடல்களுமே சிறந்த பாடல்கள்தான். மேற்கத்திய மக்களுக்கு ஸ்லம்டாக் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பிடித்தமானதாக இருக்கிறது அவ்வளவே.
'ஜெய் ஹோ' பாடல் ஆஸ்கர் வென்றதில் பாடலாசிரியர் குல்ஸாருக்கும் பெரும் பங்கு உண்டு. உயிரே படத்தின் தையா தயா பாடலில் இருந்து இருவரும் இணைந்து பணிபுரிகிறோம். படத்தின் கதைக்கு ஏற்ற அற்புதமான, அனைவரையும் வசீகரிக்கும் வகையில் ஜெய் ஹோ பாடலை எழுதினார்.
இந்திய இசையையும், தமிழக இசையையும் அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
அன்பே அவசியம்!
அன்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வெண்டும் என்று ஒவ்வொரு முறையும் வலியுறுத்தி வருகிறேன். இதையே ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிலும் எடுத்துரைத்தேன். இதை இசையின் மூலமாக மக்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.
உலகில் சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் களைந்து, அமைதியான வாழ்க்கைக்கு அன்பு மட்டுமே வழிவகை செய்கிறது.
என்னைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, இந்தி என எந்த மொழிகள் பேதமின்றி செயலாற்றி வருகிறேன். ஹாலிவுட்டில் இருந்து இப்போது இரண்டு வாய்ப்புகள் வந்துள்ளது. அதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இறுதி செய்யப்பட்டபின், அதுபற்றிய அறிவிப்பை வெளியிடுவேன்.
சிறந்த படங்களுக்கே முன்னுரிமை!
ஹாலிவுட், பாலிவுட், தமிழ், தெலுங்கு, இந்தி என எவ்வித வேறுபாடுமின்றி இசையமைப்பதே எனது எண்ணம். நல்ல கதையம்சம் கொண்ட படம் எந்த மொழிகளாக இருந்தாலும், சிறந்த படங்களுக்கு இசையமைக்க எப்போதும்போல் தயாராகவே இருக்கிறேன்.
இசைக்கு மொழி கிடையாது. எனவே, எந்த மொழிகளுக்கும் என்னால் இசையமைக்க முடிகிறது. எனது தாய்மொழி தமிழாக இருப்பதால், தமிழ் படங்களுக்கு இசையமைக்கும் போது இலகுத்தன்மையை உணர்கிறேன்.
திருக்குறளுக்கு இசை!
திருக்குறள் மற்றும் குனங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் ஆகியவற்றுக்கு இசை வடிவம் கொடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.
கவிஞர் வைரமுத்து புதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய பிறகு, அதற்கு இசையமைப்பதற்கான பணிகளை மேற்கொள்வேன்.
ஆஸ்கரில் இந்தியர்களின் புகழ் ஒலித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. குறிப்பாக, ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த சிறுவர்கள் ஆஸ்கர் சிவப்பு கம்பளத்தில் வலம் வந்தததும், அதை ஊடகங்கள் மிகச் சிறப்பான முக்கியத்துவம் அளித்ததும் அளவற்ற மகிழ்ச்சியை அளித்தது.
இளையராஜா மகிழ்ச்சி!
இந்தியத் தலைவர்கள், திரைப்பட கலைஞர்கள், இந்திய மக்கள் அனைவரின் பாராட்டுதல்களையும் வெகுவாகப் பெற்றதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆஸ்கர் பெற்றவுடன் யுவன் ஷங்கர் ராஜாவிடம் இருந்து மின்னஞ்சல் வந்தது. அதில், தந்தை இளையராஜா மிகுந்த மகிழ்ச்சி கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
சர்ச்சைக்கு விளக்கம்!
நம் நாட்டில் ஸ்லம்டாக் மில்லியனர் படத் தலைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. மேற்கத்திய நாட்டு மக்களை பொறுத்தவரையில் நாய்கள் செல்லப் பிராணிகள். செல்லமாகவும் பாசத்துடனும் அழைக்க 'டாக்' என்ற சொல்லைப் பயன்படுத்துவர். அந்த ஆரோக்கியமான விஷயத்தைக் கருத்தில் கொண்டுதான் படத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
என்னுடைய அறக்கட்டளை மூலமாக, நமது நாட்டில் ஏழ்மையை ஒழிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக இயங்கி வருகிறேன். என் ஒருவனது வாழ்நாளில் மட்டுமே இதை சாதிப்பது என்பது சாத்தியமில்லாதது. என்னால் இயன்ற வரையில் அடித்தளம் அமைக்கிறேன்," என்றார் ஆஸ்கர் தமிழன் ஏ.ஆர்.ரஹ்மான்.
இலங்கையில் அமைதி நிலவ வேண்டும்!
உலகமே உங்களை கவனிக்கும் சூழலில் இலங்கையில் தமிழர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்ற ஒரு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுகிறதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "ஆஸ்கர் விருது வழங்கும் விழாவானது சினிமாத்துறை சார்ந்தது. அங்கே அரசியல் பேச இடமில்லை.
அதேநேரத்தில், மனித உயிர்கள் அழிக்கப்படுவதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதை வலியுறுத்தும் விதமாக 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் 'வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலரவே...' என்ற பாடலின் மூலம் பதிவு செய்திருக்கிறோம்," என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்


Courtesy: vikatan.com

No comments: